Wednesday 16 June 2021

மூத்த தெய்வம் தவ்வை

தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 

இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்... மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.  

மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.  

தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்'  வழிபாடு என்று பெயர்.  

இவை அனைத்தையும்  விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு. 

கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். 

யார் இந்த மூதேவி ? அவளின்  வரலாறு என்ன ?

நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான 'அக்கை' என்கிற வார்த்தை எப்படி 'தமக்கை' ஆனதோ, அதேபோல் 'அவ்வை' என்ற வார்த்தை 'தவ்வை' ஆகியிருக்கலாம் என்கிறார்கள்  வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான்! 

உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று. 

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், 'தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய'தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. 'சேட்டை' மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 - ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது.  கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு  காரணாகமம், சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

(பட உதவி : விக்கிபீடியா)

புராணங்களில் தவ்வை பற்றி :

சைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது.  இது பண்டைய தமிழரின்,  உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன்  மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 தற்போதைய தவ்வை வழிபாடு :

 பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. 

வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன. 

 தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன. 

பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து  'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.

தவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். "வளத்தின் மூல வடிவமே  ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா  மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம். 

தமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்" என்கிறார் பரமசிவம்.

தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது. 

Saturday 2 January 2021

திருசெந்துர் ஆண்டிமடம்

🌻 ஆண்டிமடம் 

ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..

உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.

பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா

1. மௌனசுவாமி

2. காசிசுவாமி

3. ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்

4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி

5. தேசியமூர்த்திசுவாமி. 

எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே  மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்.

நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.

அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.

🙏 கு பண்பரசு

Sunday 20 December 2020

மறுபிறவி இல்லா கோவில்

🔥மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்.🔥

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.
மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..
செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.

🔥வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.

🔥மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

🔥வருடத்திற்க்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..

🔥கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..
இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

🔥ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.
ருத்ராக்ஷேவரேர் திருக்கோவில்.

இடம் :- தேப்பெருமா நல்லூர். கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

🔥ஓம் நமசிவாய.🔥

""🔥புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்
மெய்யே உன் பொன்னடிகள்  கண்டின்று வீடுற்றேன் ''

 🔥அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது ; ஆயினும் இந்த அறிய பிறவியை விடுத்து பிறவாமை  என்னும் பெரும் பேறையே நாடும் இறை யடிகலார்களின் உள்ளம். 
அத்தகைய பேரின்ப நிலையை அருளும்  திருத்தலமாக  விளங்குகிறது கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக 7  கி.மீ தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர். 

🔥புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இத்திருத்தலத்திற்கு சென்று இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று ஐதிகம்.

🔥இத்திருக்கோவில்மிகவும் பழமையானது. 
மற்ற கோவில்களுக்கும் இந்த கோவிலுக்கும் பல விதிகள் மாறுபட்டு காணப்படுகிறது . 
ஆம்  இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.
இக்கோவிலுக்கு அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது விதிப்பயனே இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படும் ஆமாம் யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் .

🔥பக்தர்களுக்கு பிரதோஷகாலத்தில் மட்டும்  வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமியைத் தரிசித்ததும்  பிரசாதமாக வில்வத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

🔥வேதாந்த நாயகி அம்பாள்:

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை  நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அம்பாள்  வேறெங்கும் காணக்கிட்டாத காட்சியாக  வலது காலை எடுத்து வைத்து  முன்னோக்கி வந்து நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் அம்பாள்  தோற்றத்தில்  அருள்புரிகிறாள். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். 

🔥அம்பாள் சன்னதியில் நான்கு வருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில்  அணைவதும்  மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது பெரும் அதிசய நிகழ்வாக இருந்தது தேப்பெருமானல்லூர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்த காட்சியையும் அம்பாளையும் வழிபட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 🔥பைரவர்:

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று  பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். ஒரே கோவிலில் இரண்டு பைரவர் இருப்பதும் இங்கேதான். 
இந்த இரண்டு பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனை பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். 
சனிபகவான்  ஏன் ஒய்யாரமாக நிற்கிறார் என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார்கள்.  

🔥இறைவன் ஈசனை  சனி பகவான்
பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் இப்படி ஒய்யாரமாய் காட்சியளிக்கிறார்.
சனிபகவான்  அம்பாளிடம், என் பணி சரியாக செய்வேன்  ""நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுதில்  ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னாராம் . 
அதன் படி அடுத்தநாள்  ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் வந்தாராம் . அப்போது அம்பாள் , ஈஸ்வரனை காப்பாற்ற  பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.
சனி பகவான் அங்கு வந்து மரத்திற்கு அருகில் இருக்கும்  அம்பாளைப் பார்த்ததும்  ஈஸ்வரன் இங்கேதான்  இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாராம்  அதன் பிறகு  அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அம்பாள்  சனி பகவானைப் பார்த்து,
"என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். 
சனி பகவான், "நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. 
என் பார்வையில் ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க ஏழேகால் நாழிகை நேரமே நான் அவரைப் பிடித்திருந்த  நேரம்'' அதுவும் உங்களுடைய ஒத்துழைப்பில்  என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.
இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, "ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். 
நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். 
எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பதும் இங்கு  ஐதீகம்.

🔥மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. 
அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். 
இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். 
அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. 
இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. 
எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.
உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர் களையும் இத்திருத் தலத்திற்கு வரவழைத்தார்.
இதனைக் கண்டநாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

🔥"பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். 
அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். 
அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

🔥இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். 
அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். 
அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். 
இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். 
வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.
மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், 
"பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். 
அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, "மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. 
இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். 
உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.
சாந்தமடைந்த அகத்தியர், "மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.
உடனே மகரந்த ரிஷி தேப்பெருமா நல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். 
இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார்.
 இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். 
ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. 
அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். 
ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். 
அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. 

🔥ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக் கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். 

🔥நந்தி :

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம் பெருமான் காட்சி தருகிறார். 
இவருக்கு வலக்காது இல்லை.
பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. 
அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.
இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.
அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

🔥ஸ்ரீ தட்சிணாமூர்த்தி : அன்னதான தக்ஷ்ணாமூர்த்தி
ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். 
இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். 
இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. 
இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

🔥ராகுகேது :

இத்திருக்கோவிலில் ராகு பகவானும் கேது பகவானும் ஒரே இடத்தில் அருள் புரிகின்றார்கள் . வேறு எங்கேயும் இப்படி இருவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருவது இல்லை. ஒரே இடத்தில் இருவரையும் வணங்கும் படி ஒற்றுமையோடு அருள்கின்றனர்.

🔥நவக்கிரகம் :

நவகிரகங்கள் ஒவ்வொன்று மாறு திசையில் இருப்பதும் இங்கு தான்.

🔥கர்ப்பகிரகம் :

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

🔥தீர்த்தம்:

இத்திருக் கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. 

🔥தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:
தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

🔥நாகம் வந்து வழிபடுகிறது :

சூரிய கிரகணத்தின் போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

🔥கோவில் முகவரி: 
1/15, அக்ரஹாரம் , 
தேபெருமாநல்லூர்  - (po) 
தேபெருமாநல்லூர் - (Tk), 
கும்பகோணம் - 612 206.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்...

🔥ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம்பெண்ணுரு ஆனாய் போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி எங்கும் பரவி எதிலும் நிறைந்த பரம்பொருளே எம்மை ஆளும் பார்வதி பரமேஷ்வரா போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 

🔥ஓம் பதிணென் சித்தர்கள் போற்றி 
ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஹர ஹர சம்போ மகாதேவா சதா சாம்பசிவா ஓம் ருத்ராகேஸ்வரா...

"🔥ஓம் வேதாந்தநாயகி சமேத விஸ்நாதாய நமசிவாய ருத்ராகேஸ்வராய நமஹ"

நினைப்பதும் நீ நினைக்க வைப்பதும் நீ நடப்பதும் நீ நடக்க வைப்பதும் நீ சர்வமும் நீ சகலமும் நீயே என் அம்மையப்பா மரணத்திலும் மகேஸ்வரா உன்னை மனதார நினைக்கின்ற மனம் வேண்டும் நீயே நானாக நானே நீயாக எல்லாவுமாய் இருப்பவனே எம்மை ஆளும் பார்வதி பரமேஷ்வரா உம் திருவடி சரணம்! சரணம்.🔥

Saturday 19 December 2020

திருவெள்ளறை ( திருச்சி)

#திருவெள்ளறை

திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - துறையூர் சாலையில் இருக்கிறது இந்த திருவெள்ளறை எனும் சிற்றூர் அங்கே வெண் பாறைகளால் ஆன குன்றின் மேல் ஒரு கோட்டை போலவே அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். திருவரங்கம் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையாகச் சொல்லப்பட்டாலும், இந்த திருவெள்ளறை திருவரங்கத்தினை விட பழமையான கோவில் என கருதப்படுகிறது. 

மூலவர்

புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

தாயார் - செண்பகவல்லி தாயார் எனும் பங்கயச் செல்விக்கு தனி சன்னதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்

பெயர் காரணம்:

இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.

தீர்த்தம்:

திருக்கோவிலில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று 7 தீர்த்தங்கள் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.

விமானம்:

விமலாக்ருதி விமானம்.- கோவில் கோபுரம் பாதி சிதைந்து பாதிமட்டுமே எஞ்சி இருக்கின்றது.

கோவிலின் சிறப்பம்சம்:

எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு.
தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சிபிச்சக்கரவர்த்திக்கு பெருமாள் ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி அளித்ததாக தல புராணம் கூறுகிறது. இதனால் ஸ்வேதபுரி நட்சத்திரம் எனவும் பெயர் வந்தது.

ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய, சந்திரர்கள், ஆதிசேசன் முதலியோர் மனித வடிவில் வந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ததாக் கூறப்படுகிறது.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை.

தல வரலாறு:

திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்றார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு  என்றாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல்.

இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார். இந்நிலையில் இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் சென்றபோது, ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது.

படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும்போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன்.
நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்றார்.

அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்றார் பெருமாள். இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்றார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக’ என்றார்.

அரசனும் கோவில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்றார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார்செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

கோவில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது அமைந்துள்ளதால் இத்தலம்  வெள்ளறை என்ற பெயர் பெற்று  தற்போது திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும், தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள்புண்டரீகாட்சப்பெருமாள் ஆனதாக வரலாறு கூறுகிறது.
      
கோவில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள்உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4வது திவ்ய தேசம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு படைத்த பொங்கலை சாப்பிட்டால் புத்ரபாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்

Thursday 3 September 2020

அதிசிய கோவில்கள்

*படிக்க புண்ணியம் வேண்டும்*

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான்,    இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!

இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!

*கடன், சங்கடங்கள் போக்கும்* " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

*பிதுர் தோஷம் நீக்கும்* " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர்.

இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

*மரண கண்டம் நீக்கும்* " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.

*தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25

மொத்தம் 275
இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25

சிவஸ்தலத் தொகுதிகள்

வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்

1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது
8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது

2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்

*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது
4. காசி ---- இறக்க முக்தி தருவது

*பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி ----- வாயு (வளி)
5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)

*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு --- இரத்தின சபை
2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி --- தாமிர சபை
5, திருக்குற்றாலம் --- சித்திர சபை

*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்
3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்

*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்
12. திருவக்கரை --- அரங்கநாதர்

*ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

*உட்கோயில் கோயில்*

1. திருவாரூர் அரநெறி ---- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில் ---- மீயச்சூர்

*காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

*மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

*பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

*அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு --- திருவாரூர்
2. வீதி அழகு --- திருஇடை மருதூர்
3. மதிலழகு --- திருவிரிஞ்சை
4. விளக்கழகு --- வேதாரண்யம்
5. கோபுரமழகு -- திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம் --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர் --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம் --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

*ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்*

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

*திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.*

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1. மயூர தாண்டவம் - மயிலாடுதுரை
2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிசம தாண்டவம்- திருவக்கரை
4. சதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

*பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் - கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1. திருவானைக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்தேவூர்
4. திருக்கீழ்வேளூர்
5. சிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாளம்
8. தண்டலை நீள் நெறி
9. திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

*பெரிய லிங்கம்*

கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.

*பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

*புகழ்பெற்ற கோயில்கள்*

கோயில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை
பூங்கோயில் – திருவாரூர்
திருவெள்ளடை- திருக்குருகாவூர்
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூர்
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநறையூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1. திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2. திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3. சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4. மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2. அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3. மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருவண்ணாமலை
2. அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3. மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்

*பக்தர்கள் பொருட்டு*

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

               ஓம் சிவாய நம 🙏
               சர்வம் சிவமயமே 
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் 

நன்றி...

Monday 24 August 2020

திருநல்லம்

நடராஜர் ஆட்கொண்ட கோனேரி ராஜபுரம் போவோமா !...
 
அந்த சிற்பி, ஆறாவது முறையாக
நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு
அச்சு செய்து பஞ்ச உலோகங்களை
தனியே காய்ச்சி வார்த்துக்
கொண்டு இருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே
வார்த்தாகி விட்டது. சிவனுக்கு உரிய
சடையை, அந்த சடையில் இருக்கும்
நாகத்தை கங்கை உருவத்தை
வார்த்தாகி விட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும்
தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி
விட்டது. இப்போது நடராஜரையும்,
சிவகாமியையும் வார்க்க வேண்டும். 

மழு தொலைவில் கொதித்துக்
கொண்டு இருக்கிறது. அடுப்பைத்
துருத்தியால் வேகமாக ஊதி 
உலையின் தீவிரத்தை அதிகப்
படுத்தி மழுவைக் கொதிக்க 
வைத்து கொண்டு இருந்தான். 
மழு தயார் நிலையில் இருந்தது. 

சிற்பி திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். அவளும் சரி என்று தலையாட்ட ...

படுக்க வைக்கப்பட்ட பெரிய 
களிமண் அச்சுக்கு முன் கை கூப்பி
நின்றான்.

இது ஆறாவது முறை.  தவறு என்ன 
செய்தேன் என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு
பின்னம் நடந்து கொண்டு இருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் 
செய்கிறேன் என்ற கர்வம் 
எனக்கு இல்லை.

ஈசனே, நீயே வந்து குடி
கொண்டாலொழிய உன் உருவத்தை 
ஒரு நாளும் செய்ய முடியாது.
எங்கேனும் ஒரு கர்வத்தில் நான்
இருப்பின் தயவுசெய்து என்னை
தண்டித்து விடு. இந்த உருவத்திற்குள்
வராமல் போய் விடாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் 
சிற்பியின்  காதில் விழுந்தது.
வேண்டும் என்றே தவறு செய்கிறாய் !. என்னிடம் காசு வாங்குவதற்காகவே
நீயாக ஏதேனும் தவறு செய்து விட்டு, பின்னமாகி விட்டது என்று வருத்தப்
படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக 
நடராஜர் சிலையை செய்வதாக 
கூறி என்னுடைய சம்பளத்திலே
தின்று கொழுத்து செய்து வருகிறாய்.
இதுவே கடைசி முறை. இன்னும் 
இரண்டு நாட்களில் நடராஜர் 
சிலையை செய்யவில்லை எனில் 
நீ இங்கிருப்பது புண்ணியம் இல்லை !

உன்னை சிற்பி என்று நாங்கள் 
அழைத்து லாபமில்லை. எனவே 
உன் கதையை என் வாளால் 
முடிப்பேன் என்று சீறினான் 
அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள்
பொறுமையாக இருந்ததே பெரிய
விஷயம். அவன் பொறுமை 
மீறும்படியாக என்ன ஏற்பட்டது
தெரியவில்லை, அரசனிடம் இருந்து
நடராஜர் சிலை செய்ய உத்தரவு
சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான
ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க
வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும்
என்ற வேகம் வந்தது. வேகத்தோடு
கர்வமும்  வந்ததோ, என்னவோ
தெரியவில்லை. ஐந்து சிலைகள்
செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை !

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா
விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு
முறை சோதித்து மெழுகால் சிலை
செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி,
சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து
காற்றுப் போக வழிகள் செய்து அவன்
மழுவைக் காய்ச்சி இறைவனை 
வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக்
கொண்டிருக்க, என்னுடைய வாழ்க்கை
உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது
உன்கையில் இருக்கிறது. உனக்கு
விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து
உட்கார்ந்து கொள் !
இல்லையெனில்
என்னை சாக விடு...! என்று
சொல்லி விட்டு முழு மனதோடு மழுவை
கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும்.

இருட்டில் யாரோ தொலைவில் இருந்து
வருவது தெரிந்தது. வந்தவர்கள் 
ஆணும், பெண்ணுமான வயதான
அந்தணர்கள். 

"அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது,
ஏனப்பா மிகப் பெரிய ஊர் என்று சொல்கிறார்கள். ஏன் இப்படி
 வயல்களுக்கு நடுவே இருக்கிறது. 
இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி
விட்டது. 

ஐயா, சிற்பியே, தயவு செய்து 
குடிப்பதற்கு ஒரு குவளை நீர் 
கொடு என்று கேட்டார் அந்தணர்.

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு
அவர்களைப்  பார்த்தான், என்ன
இந்த அந்தணர் தன்னிடம்  போய் நீர்
கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

அய்யா, நான் சிற்பி, கருமார் 
இனத்தை சேர்ந்தவன்.

அந்தணர்கள் வசிக்கும் பகுதி
கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது.
நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் 
போல் இருக்கிறீர்கள். எனவே, அங்கே 
போய் அவர்கள் வீட்டில் குடிக்க நீர் 
கேளுங்கள், தருவார்கள் என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான்
வந்தவர் கை தட்டி அழைத்து எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, 
அங்கு  போகிற வரையில் என்னால்
தாங்க இயலாது. சுருண்டு விடுவேன்
என்று தோன்றுகிறது. எனவே உன்
கையால் ஒரு குவளை நீர் கொடு
என்றார்.

நான் இங்கு வேலை செய்து
கொண்டிருப்பது உன் கண்ணில்
காணவில்லையா, ஒரு சிலை 
வடிப்பது எவ்வளவு கடினம் என்பது
 தங்களுக்குத் தெரியாதா...?

கவலையோடு நான் இங்கு நின்று
கொண்டிருக்கிறேன். குடிக்கத் 
தண்ணீர் கொடு என்று என் உயிரை 
ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் 
தண்ணீர் இல்லை, இந்த மழு தான்
இருக்கிறது வேண்டுமானல் இதைக்
குடியுங்கள் என்று பதட்டத்தோடு
சொல்ல.

சரி அதையே குடித்துக் கொள்கிறேன்
என்று அருகே வந்தவர், உஞ்சவர்த்தி
பிராமணர் போல ஒரு சொம்பை
இடுப்பில் கட்டி தொங்க விட்டிருந்தார்.
அந்தச் சொம்பை விட்டு மழுவை
மொண்டார். கொதிக்கின்ற நெருப்பு
ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து
உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று. மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத்
தொலைவில் நின்றிருந்த அவரது
மனைவி வாய் விட்டுச் சிரித்தாள்...

சுற்றி உள்ள உதவியாட்களும், 
சிற்பியும் பயந்து போய் ஓவென்று
கூவ, வந்தவரையும் காணோம், 
அவரது  மனைவியும் காணோம்.
 
ஐயா, கொதி நிலைக்கு வந்து விட்டது
என்று உதவியாளர் கூவ, எல்லாரும்
கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க
குழாயைத் திறந்து விட்டார்கள். மழு
தரை வழிந்து பள்ளத்தில் வழியே
சிற்பத்திற்குள் நதி போல் ஓடி புகுந்து
கொண்டது. சரியாய் எண்பது
நொடிகளில் எல்லா உருக்கு 
உலோகமும் சிலைக்குள் போய்
தங்கி விட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுழு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை. கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை. 

உருக்கு மொத்தமும் வழிந்ததும் 
அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணி வைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள். விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்...! யோசித்தார்கள்...!

வந்தது சிவபெருமானே என்று 
முடிவு செய்தார்கள்.ஓடிப் போய் களி மண்ணில் நீர் ஊற்றி மெல்ல 
மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி 
உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான
 நாசியும் அற்புதமான கோணத்தில்
 நடனமாடும் சிவனுருவம் மிகச் 
சிறப்பாக வந்து இருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள். சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர் கூடிப் பார்த்து வியந்தது.
கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப் போய் மந்திரிகள்
செய்தி சொல்ல, மன்னனும் 
விரைந்து வந்து பார்த்தான். 

உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால்தானடா காரியம் செய்ய முடிகிறது. 
தலையை கொய்து விடுவேன் என்று
நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான
ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய்,
இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது
உண்மை என்று இப்போது தெள்ளத்
தெளிவாக புரிந்து விட்டது பார் என்று
சிரிப்போடும் கடுப்போடும் மன்னன்
பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார்.

என்ன சொல்ல வருகிறாய் மன்னன் மறுபடியும் சீறினான்.

இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார். தண்ணீர் கேட்டார் மறுத்தேன். இதுதான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன். மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார் என்று சொல்ல.... இந்த கதையை எல்லாம் என்னிடம் விடாதே என்று மறுபடியும் சீறினார்.

இல்லை அரசே இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல, என்று பணிவாக சொல்ல, அரசன் 
கெக்கலித்து கிண்டலாகச் 
சிரித்தான்.

உளியை சிற்பியிடம் இருந்து பிடுங்கி, 
இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது!  தரையை நனைத்தது. 

மக்கள் பயந்தார்கள்.
அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் 
கைகளை கூப்பி மன்றாடி மன்னிப்பு 
கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் வரலாறு.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் 
புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக 
போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே 
ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல 
நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில்தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில்தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டும் அல்ல.
சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகி விடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் 
மயக்கமாகியே விடுவார்கள்!

கை ரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய 
இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே 
இருக்கிறது. கோயில் ஆயிரம் 
வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம்
 சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் என்கிற பூமீஸ்வரர்!

தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம்
வேண்டும் என்று விரும்புபவர்கள்
இவரை வணங்கினால் நிச்சயம்
பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
நான் செழிப்பாக இருக்க நல்ல 
பூமியை கொடு என்று இந்த
இறைவனிடம் வேண்டிக் கொண்டு
உழைத்தால் நிச்சயம் அவன் 
கையகல பூமியாவது சொந்தமாக அருள்வான் என்று நம்பப்படுகிறது.

தவிர இங்கு வைத்தியநாதன் 
சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய
நாத சன்னதியில் ஜபம் செய்தால். 
வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத்
திரும்பத் சொன்னால் சம்மந்தப்
பட்டபவருக்கு நோய் குணமடைவதாக
அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம 
தீர்த்தம்.
                                    
கும்பகோணம் போகிறவர்கள் 
அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு
ஒதுக்கி வைத்து விட வேண்டும். நிதானமாக பார்த்து விட்டு வர வேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத 
சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து 
ஜபம் செய்து விட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லி விட்டு வருதல் மிக அவசியம் எல்லாவற்றையும்
விட உங்கள் வாழ்நாளில் ஒரு 
முறையேனும் இந்த நடராஜனை 
பார்த்து கைகளை கூப்பி விட்டு வாருங்கள்.

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே
வாங்கி கொண்டு போய் அவன் கால்
அடியில் சொரிந்து விட்டு வாருங்கள்.

அந்த வணக்கம் சிலை செய்ய சொன்ன அரசனுக்கா, செய்த சிற்பிக்கா, அல்லது இவர்கள் எல்லாவற்றையும் இயக்கி தன்னை உள்ளடக்கிக் காட்சி தரும்  சிவனுக்கா என யோசியுங்கள்!

திருநல்லம் ஒரு முறையேனும் 
சென்று வாருங்கள். சிவ அழகில்
சொக்கிப் போய் வருவது 
கண்கூடான உண்மை.

வேலும் மயிலும் சேவலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

தவறாது பகிர்வோம்.

Wednesday 27 November 2019

மறுபிறவி இல்லா கோவில்

போக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்.
தஞ்சை மாவட்டம் , நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட காவேரி பாயும் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டின் பிரபலமான பிரதான கோவில்களாக உள்ளன. இதில் இதில் பல பழமையான கோவில்கள் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் . அனைத்து தோஷங்கள் நீங்குவதற்கும் பல புராண வரலாறுகளை கொண்ட கோவில்கள் இங்குள்ளது.
இதில் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள விஸ்வநாதஸ்வாமி கோவில் மிக புகழ்பெற்றது இந்த கோவிலை வணங்கினால் பிறப்பற்ற பெரு வாழ்வு உண்டாகுமாம்.
அதாவது மறு ஜென்மம் என்பதேகிடையாது என்பதுதான் இக்கோவில் சென்று வந்தால் நமக்கு ஏற்படக்கூடிய பலன் ஆகும்.
கொடூரமான மனித வாழ்வில் மனிதனாகவோ, நாயாகவோ, நரியாகவோ மற்ற எந்த உயிரினமாகவோ பிறந்து துன்பப்பட பல பக்குவப்பட்ட மனிதர்கள் விரும்புவதில்லை. இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களின் பூர்வஜென்ம கர்மா, மற்றும் அவர்கள் அறியாமல் தெரியாமல் செய்த பாவ கர்மா காரணமாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க நேரிடுகிறது.
இந்த கோவில் சென்றால் பிறப்பற்ற பெருவாழ்வு உண்டாகுமாம்.மறுபிறவி கிடையாதாம். இருந்தாலும் இக்கோவில் செல்வது மிகவும் கடினம் என்பது பலரும் சொல்வதாக உள்ளது.
இந்தா தானே இருக்கிறது கும்பகோணம் சென்று விட்டு வந்து விடலாம் என நினைத்தாலும் நம்மால் செல்ல முடியாமல் கடும் தடங்கலை ஏற்படுத்துமாம். பலமுறை முயற்சி செய்தால்தான் இக்கோவில் செல்ல முடியும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.
“”யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.
12 ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் சிவன் இத்தலத்திற்கு அழைத்துள்ளாராம். சிவபெருமானையே சனீஸ்வரர் பிடிக்க வந்து ஒரு கட்டத்தில் ஈஸ்வரனிடம் சரணாகதி அடைந்தாராம். இங்கு சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்
12 ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் மட்டும் இங்கே தங்கி விட்டனராம் அதனால் இவர்களின் பெயரால் இக்கோவில் அழைக்கப்படுகிறது.
அகத்தியர் இவரை தரிசிக்க வந்தாராம் அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை வர விடாமல் சிவபெருமான் தடுக்க நினைத்து மகரந்த மகரிஷி என்ற முனிவரை அனுப்பினாராம் மகரந்த மகரிஷி முனிவர் அகத்தியரை தடுக்க அகத்தியர் கோபமடைந்து யாழி{ சிங்க} முகமாக உள்ளவாறு மாற்றினாராம்.
சிவபெருமானின் கட்டளைப்படிதான் உங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.
கோபம்தணிந்த அகத்தியர், “”மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.
உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார்.
இப்படியே ஐம்பது வருடங்கள் பூஜை செய்த நிலையில். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் விழுந்தது.
அப்போது இறைவன் ஜோதியாக காட்சி கொடுத்தாராம் இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார்.  அத்தோடு அவர் சாபமும் நீங்கியது.
இப்படி பல சிறப்புகளை கொண்ட கோவிலான தேப்பெருமாநல்லூர் கோவிலுக்கு நீங்களும் சென்று வாருங்கள்.கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் இருந்து அருகில் உள்ளது இக்கோவில்..
          .... திருச்சிற்றம்பலம்...